இஸ்லாமாபாத்தில் பயங்கரம்: மசூதிக்குள் புகுந்து தற்கொலை படை தாக்குதல் – 15 பேர் பலி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள தர்லாய் இமாம்பர்கா மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். மாலையில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது, மசூதியின் நுழைவாயிலில் தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்தார். பாதுகாப்புப் படையினர் அவரை மசூதிக்குள் நுழைய விடாமல் தடுத்ததால், நுழைவாயிலிலேயே இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
இந்த சக்திவாய்ந்த வெடிப்பில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்புச் சத்தத்தில் மசூதியின் கதவுகள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் நொறுங்கின. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.