பீகார் தேர்தல் ரத்தாகிறதா? பிரசாந்த் கிஷோரின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

பீகார் சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ் கட்சி’ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மக்கள் தீர்ப்பை நீதிமன்றத்தின் மூலம் மாற்ற முடியாது என்று நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் ஜெயமால்யா பாக்சி அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்தது. அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நிலையில், இத்தகைய மனுக்களைத் தாக்கல் செய்வதை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
தேர்தலுக்கு முன்னதாக அரசுத் திட்டங்களின் கீழ் பணம் விநியோகிக்கப்பட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், மாநிலம் தொடர்பான விவகாரங்களை உயர்நீதிமன்றத்தில் அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தத் தீர்ப்பின் மூலம் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசுக்கு இருந்த சட்டச் சிக்கல்கள் நீங்கியுள்ளன. தேர்தல் நேர்மை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்த உத்தரவு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.