சொன்னபடி செய்த முதல்வர் விஜய்! 717 டாஸ்மாக் கடைகள் நிரந்தர மூடல்!

தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) கீழ் இயங்கி வரும் மொத்தம் 4,765 கடைகளில், பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் கடைகளை ஆய்வு செய்யுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் பல கடைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டது.
பொதுமக்களின் நலன் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்களின் அருகே இருந்த 276 கடைகள், கல்வி நிறுவனங்களின் அருகில் இருந்த 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் இயங்கி வந்த 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் வெறும் இரண்டு வார காலக்கெடுவிற்குள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
முதல்வரின் இந்த மக்கள் நலன் சார்ந்த அதிரடி உத்தரவை அடுத்து, மேற்கண்ட பகுதிகளில் இருந்த மதுக்கடைகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்த இந்த கடைகள் மூடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.