ஐசி 814 விமான கடத்தல் மற்றும் விடுதலை குறித்து மசூத் அசாரின் புதிய ஆடியோ ரகசியங்கள் வெளியீடு

ஜெய்ச்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், 1999-ஆம் ஆண்டு ஐசி 814 விமான கடத்தலின் போது தான் விடுவிக்கப்பட்ட அனுபவங்கள் குறித்த புதிய ஆடியோவை வெளியிட்டுள்ளான். சிறையில் இருந்த தன்னை டெல்லி அதிகாரிகள் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து விசாரித்ததாகவும், தனது கொள்கையில் உறுதியாக இருந்ததாகவும் அவன் கூறியுள்ளான். இந்திய அதிகாரிகள் தன்னை அச்சுறுத்திய போதிலும், பயணிகளின் உயிரைக் காக்க இந்திய அரசு தன்னை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவன் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளான்.
டிசம்பர் 1999-ல் காத்மாண்டுவிலிருந்து டெல்லி வந்த விமானம் கடத்தப்பட்டு கந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. 180 பயணிகளின் நலன் கருதி இந்தியா அசாரை விடுவித்தது. கடவுச்சீட்டு அல்லது விசா இல்லாமல் தான் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக அவன் குறிப்பிட்டுள்ளான். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்ற அவன், இந்திய நாடாளுமன்றம் மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்கு காரணமான ஜெய்ச்-இ-முகமது அமைப்பைத் தொடங்கினான்.