ஜெர்மனியில் இந்திய மாணவர் பரிதாப மரணம் பொங்கல் பண்டிகைக்கு ஊர் திரும்பவிருந்த நிலையில் சோகம்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் வசித்து வந்த 25 வயதான இந்திய மாணவர் தோக்லா ரித்திக் ரெட்டி, அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க முயன்று உயிரிழந்தார். கட்டிடத்தில் பரவிய கரும்புகையிலிருந்து தப்பிக்க அவர் மேல்தளத்திலிருந்து கீழே குதித்தபோது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த ஆண்டு மகர சங்கராந்தி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட அவர் ஊருக்கு வரவிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த ரித்திக், கடந்த 2023 ஆம் ஆண்டு உயர்கல்விக்காக ஜெர்மனி சென்றார். தற்போது அவரது உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியை குடும்பத்தினர் நாடியுள்ளனர். இதேபோல் நியூயார்க்கில் தங்கியிருந்த மற்றொரு இந்திய மாணவியும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.