ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல ஈரான் அதிரடி அனுமதி

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய சரக்குக் கப்பல்கள் விரைவில் மற்றும் பாதுகாப்பாக பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி உறுதியளித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த கடல் பகுதியில் சுமார் 28 இந்தியக் கப்பல்களும் 750-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். சமீபத்தில் ஓமன் பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், இந்த பாதுகாப்பு உத்தரவாதம் இந்தியாவிற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இக்கட்டான சூழலில் இந்தியாவிற்கு ஈரான் எப்போதும் துணையாக இருக்கும் என்றும் தூதர் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.