ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு முதலிடத்தை இழந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் மிரட்டலாக முன்னேறிய இஷான் கிஷன்

டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய வீரர் இஷான் கிஷன் அதிரடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டிகளில் அபாரமாக விளையாடிய அவர், தற்போது முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மாவை நெருங்கியுள்ளார். அதேபோல், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் 18 இடங்கள் முன்னேறி தனது வாழ்நாள் சிறந்த தரவரிசையான 22-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பின்னடைவைச் சந்தித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக முதலிடத்தில் இருந்த அவர், தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் அசத்திய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ஷிவம் துபே இரண்டு இடங்கள் சரிந்து 11-வது இடத்தைப் பெற்றுள்ளார்.