மத்திய அரசின் அதிரடி முடிவால் 18 ரூபாய் சிகரெட் இனி 72 ரூபாய்க்கு விற்கப்படும் அபாயம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி மசோதா 2025 மூலம் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலை கணிசமாக உயரவுள்ளது. தற்போதைய சட்டப்படி 1000 சிகரெட்டுகளுக்கு 200 முதல் 735 ரூபாய் வரை விதிக்கப்பட்ட வரி, இனி 2,700 முதல் 11,000 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. இதன் காரணமாக, சந்தையில் தற்போது 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த முடிவை சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்றுள்ளனர். சிகரெட் விலை உயர்வால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் குறையும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தாக்கல் செய்துள்ள இந்த மசோதா, ஹுக்கா, ஜர்தா உள்ளிட்ட அனைத்து புகையிலை பொருட்களின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வால் மக்கள் மற்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களுக்கு மாற வாய்ப்புள்ளதாகவும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.