எக்ஸ்ரே லென்ஸ் மூலம் பயணிகளின் பையை நோட்டமிட்டு கொள்ளை ஓடும் ரயிலில் அதிர்ச்சி பின்னணி

சத்பாவனா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பிரீதி கெம்கா என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளைத் திருடிய வழக்கில், தீரஜ் சிங் மற்றும் அவரது மகன் அங்கித் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். தீரஜ் சிங் ‘எக்ஸ்ரே லென்ஸ்’ என்ற நவீன கருவியைப் பயன்படுத்தி பயணிகளின் பைக்குள் இருக்கும் நகைகளை ரகசியமாக கண்டறிந்து திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். திருடப்பட்ட நகைகள் உண்மையானதா என்பதை அறிய அவர் நவீன கருவிகளை வைத்திருந்ததோடு, கொள்ளையடித்த பணத்தை தனது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து வந்துள்ளார்.
ரயில்வே எஸ்பி வீணா குமாரி கூறுகையில், தீரஜ் சிங்கை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். போலீஸ் சோதனையில் வைர மோதிரங்கள், நெக்லஸ்கள் மற்றும் ஐபேட் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. நகைகளில் உள்ள வைரங்களை பிரித்தெடுக்க பல பொற்கொல்லர்களிடம் முயன்றும் தோல்வியடைந்த நிலையில், போலீசார் இந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.