400 ஆண்டுகால தபால் சேவையை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி டென்மார்க் வரலாற்று முடிவு

உலகின் முதல் நாடாக டென்மார்க் தனது 400 ஆண்டுகள் பழமையான பொது தபால் சேவையை முழுமையாக நிறுத்தியுள்ளது. கடந்த 1624 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாரம்பரிய சேவையின் கடைசி கடிதம் டிசம்பர் 30 அன்று விநியோகிக்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கடிதங்களின் பயன்பாடு 90 சதவீதம் குறைந்ததே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இதன் மூலம் அரசு தபால் நிறுவனமான ‘போஸ்ட்நார்ட்’ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் பயணத்தை முடித்துக் கொண்டது.
டிஜிட்டல் மயம் மற்றும் கடும் நஷ்டம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இனிமேல் கடிதங்களுக்குப் பதிலாக ஆன்லைன் வர்த்தகம் சார்ந்த பார்சல் சேவைகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக போஸ்ட்நார்ட் சிஇஓ கிம் பெடர்சன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பொதுமக்கள் தங்களின் அவசர கடித தேவைகளுக்கு தனியார் கூரியர் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.