ஹெல்மெட்டில் தேசிய கொடிக்கு பதில் பாலஸ்தீன கொடி காஷ்மீர் வீரர் மீது போலீஸ் அதிரடி

ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஜே.கே 11 அணிக்காக விளையாடிய புர்கான் பட் என்ற வீரர், தனது ஹெல்மெட்டில் இந்திய தேசிய கொடிக்கு பதிலாக பாலஸ்தீன கொடியை அணிந்து விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, ஜம்மு கிராமப்புற போலீசார் அந்த வீரரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இந்த தொடரை ஒருங்கிணைத்த ஜாஹித் பட் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் (JKCA) வெளியிட்டுள்ள விளக்கத்தில், இந்த லீக் போட்டிக்கும் பிசிசிஐ அல்லது மாநில சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இது ஒரு தனியார் தொடர் என்றும், இதற்கு தாங்கள் அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் பிரிகேடியர் அனில் குப்தா கூறியுள்ளார். விளையாட்டு மைதானத்தில் அரசியல் ரீதியான சின்னங்களை பயன்படுத்தியதற்காக அந்த வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.