ஆபத்தில் வங்கி கடன்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை, தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற பிணையில்லாத கடன்களால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளது. மொத்த சில்லறை கடன் குறைபாடுகளில் (Defaults) 53.1% பங்களிப்பை இந்த பாதுகாப்பற்ற கடன்களே கொண்டுள்ளன. தனியார் வங்கிகளில் இது 76% ஆக உயர்ந்துள்ளது. கிரெடிட் கார்டு பாக்கித் தொகை ரூ.2.92 லட்சம் கோடியைத் தொட்டுள்ள நிலையில், வாராக்கடன் அளவு அதிகரித்து வருவது வங்கித் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறுவதாக அறிக்கை கூறுகிறது. ஃபின்டெக் செயலிகள் மூலம் எளிதாகக் கடன் கிடைப்பதும், 42% வரையிலான அதிக வட்டி விகிதமுமே இதற்கு முக்கியக் காரணங்களாகும். இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ரூ.10,000-க்கும் குறைவான சிறு கடன்களில் அதிக குறைபாடுகள் பதிவாகியுள்ளன. இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விழிப்புடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.