வோடபோன் ஐடியா பங்குகள் கடும் சரிவு மத்திய அரசின் சலுகை பலன் தருமா

மத்திய அமைச்சரவை வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ. 87,695 கோடி ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதன்படி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 2032-ல் தொடங்கி 2041 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டி மற்றும் அபராதக் கணக்கீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு ஓரளவுக்கு மருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடனைத் தள்ளுபடி செய்யாமல் கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றனர், இதனால் பங்கின் விலை 30 நிமிடங்களில் 15% சரிந்தது.
ஏஜிஆர் சிக்கலுக்கு மத்தியில், தெலங்கானா ஜிஎஸ்ட்டி துறையிடமிருந்து ரூ. 6.78 கோடி அபராத நோட்டீஸ் வந்திருப்பது நிறுவனத்திற்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2021-22 நிதியாண்டில் உள்ளீட்டு வரி வரவு கோரலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்போவதாக நிறுவனம் அறிவித்தாலும், சந்தையில் நிலவும் எதிர்மறையான சூழலால் பங்கின் விலை அதன் ஆரம்ப விலையிலிருந்து சுமார் 10% குறைந்து 10.81 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.