வரியை உயர்த்தாமல் வருவாயைப் பெருக்க வருமான வரித்துறை அதிரடி

இந்தியாவின் நேரடி வரி தளத்தை விரிவுபடுத்த வருமான வரித்துறை விரைவில் ஜிஎஸ்டி தரவுகளை ஆழமாக ஆய்வு செய்ய உள்ளது. இதன் மூலம் முறைசாரா துறையினரை முறைசார் பொருளாதாரத்திற்குள் கொண்டு வரவும், தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தளத்திலுள்ள வர்த்தகத் தகவல்கள் மூலம் வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமானத்தைத் தாமாகவே முன்வந்து தெரிவிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
தற்போது வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வருவாயை அதிகரிக்க இத்தகைய தரவு பகுப்பாய்வு அவசியமாகிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தகவல்களைக் கொண்டு வரிப் படிவங்களை எளிமையாக்குவதன் மூலம், வரி செலுத்துவோர் மீதான சுமை குறையும். வரும் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட நேரடி வரி இலக்கை எட்டவும், வெளிப்படையான வரி நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த டிஜிட்டல் முறை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.