லெபனான் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக அதிரடி புகார்

தெற்கு லெபனானின் யோஹ்மூர் நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் தடை செய்யப்பட்ட ‘வெள்ளை பாஸ்பரஸ்’ குண்டுகளை பயன்படுத்தியதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மார்ச் 3 அன்று நடந்த இந்த தாக்குதலில் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. காற்றில் பட்டவுடன் பயங்கரமாக எரியும் இந்த வேதிப்பொருள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகளவில் அதிகரித்துள்ளன.
இந்த பரபரப்பான குற்றச்சாட்டுக்கு மத்தியில் பெய்ரூட்டின் தெற்குப் பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் பெரிய அளவிலான தாக்குதலுக்கு இந்த உத்தரவு வழிவகுத்துள்ளது. இதற்கு முன்னரும் காசா மற்றும் லெபனான் எல்லைகளில் இஸ்ரேல் இத்தகைய ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்தன. இருப்பினும் வழக்கம் போல் இஸ்ரேலிய ராணுவம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.