மென்பொருள் துறையில் மகா பிரளயம், வேலைவாய்ப்புகளை விழுங்குமா புதிய ஏஐ தொழில்நுட்பம்

செய்தி பிரிவு : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி தற்போது உலகளாவிய மென்பொருள் சந்தையையே ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது. ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ கருவி, எந்த ஒரு மென்பொருளின் உதவியும் இன்றி சட்ட ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளைத் தானே செய்கிறது. இதனால் டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இது சாதாரண ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும், மென்பொருள் துறையை நம்பியுள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனை வல்லுநர்கள் ‘சாஸ்போகாலிப்ஸ்’ (SaaSpocalypse) என்று அழைக்கிறார்கள், அதாவது மென்பொருள் துறையின் அழிவு காலம். அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சரிவு, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்பம் இவ்வளவு வேகமாக வளர்வதால், இனி மென்பொருள் நிறுவனங்களின் தேவை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இது வெறும் பங்குச்சந்தை வீழ்ச்சி மட்டுமல்ல, சாதாரண மனிதர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தில் ஏற்படப்போகும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் அறிகுறியாகும்.