மீன் செதில்கள் மூலம் செயற்கை கருவிழி உருவாக்கி ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனை

ஸ்பெயினின் கிரனாடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மீன் செதில்களைப் பயன்படுத்தி செயற்கை கருவிழியை உருவாக்கி மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக கருவிழியில் ரத்த நாளங்கள் இல்லாததால் பாதிப்புகளைக் குணப்படுத்துவது மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இதுவரை கண் தானம் செய்தவர்களின் கருவிழிகளையே அறுவை சிகிச்சைக்கு நம்பியிருக்க வேண்டிய சூழலில், இந்த புதிய கண்டுபிடிப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெண்டை உள்ளிட்ட எளிதில் கிடைக்கக்கூடிய மீன் வகைகளின் செதில்களைக் கொண்டு இந்த செயற்கை விழி வடிவமைக்கப்பட்டுள்ளது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த முயற்சி நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளது. இன்னும் சில கட்ட ஆராய்ச்சிகள் பாக்கியுள்ள போதிலும், கண் மருத்துவத் துறையில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.