மதியம் 1:11 மணிக்கு குண்டுவெடிப்பு – டெல்லி பள்ளிகளுக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள ஒன்பது முன்னணி பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மதியம் 1:11 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக மாணவர்களை வெளியேற்றின. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மிரட்டல் மின்னஞ்சலில் ‘காலிஸ்தான் நேஷனல் ஆர்மி’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தையும் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அப்சல் குருவின் நினைவாக டெல்லியை காலிஸ்தானாக மாற்றுவோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய நபர்களை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.