மகளிர் உரிமைத் தொகை வெறும் பணமல்ல அது கிராமப்புற பொருளாதாரத்தின் புரட்சி மற்றும் அமைச்சர் கோவி செழியன் அதிரடி பேச்சு

மத்திய அரசின் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறந்த நிர்வாகத்தால் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக திகழ்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஓமலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராமத்தில் சுமார் 2,500 பெண்களுக்கு இந்தத் தொகை கிடைக்கும்போது, அங்கு மாதந்தோறும் பல லட்ச ரூபாய் பணப்புழக்கம் அதிகரித்து சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதாக அவர் விளக்கினார்.
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும், மற்ற கட்சிகள் இரண்டாம் இடத்திற்காகவே போட்டியிடுகின்றன என்றும் அவர் விமர்சித்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்க்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்த அமைச்சர், மக்களின் கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதே திமுகவின் பலம் என்றார். மகளிர் உரிமைத் திட்டத்தால் பயனடைந்த கோடிக்கணக்கான பெண்கள் திமுகவின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த பொருளாதார சுதந்திரமே மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வழிவகுக்கும் என நம்பிக்கையோடு தெரிவித்தார்.