பெங்களூரில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல் பொதுமக்களுக்கு உணவு சிக்கல்

உலகளாவிய எரிபொருள் விநியோக சங்கிலி பாதிப்பால் பெங்களூரில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நகரின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதாக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்களின் அன்றாட உணவுத் தேவை கேள்விக்குறியாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதே இந்த தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாகும். அடுத்த 70 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. தட்டுப்பாட்டை சீர்செய்ய மத்திய அரசு ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கிறது.