நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஐசிசி ஒழுங்குமுறை நடவடிக்கையில் சிக்கிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான விறுவிறுப்பான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் லுங்கி என்கிடியின் மணிக்கட்டுப் பட்டையை எதிர்த்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நபியின் போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் அவரது கணக்கில் ஒரு டீமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இருமுறை சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த பரபரப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது சூப்பர் ஓவரில் 24 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடியும் அந்த அணியால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. களத்தில் ஒழுக்கத்தை மீறியதால் அனுபவ வீரர் நபிக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.