நடுநிசியில் சுடுகாட்டிலிருந்து வந்த பிரியாணி ஆர்டர் அங்கு சென்ற டெலிவரி பாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு 1 மணியளவில் பிரியாணி ஆர்டர் ஒன்றை டெலிவரி செய்யச் சென்ற இளைஞர், லொகேஷன் காட்டிய இடத்திற்குச் சென்றபோது அது ஒரு சுடுகாட்டின் வாசல் என்பதை கண்டு மிரண்டு போனார். பயத்துடன் அவர் அந்த வாடிக்கையாளருக்கு போன் செய்தபோது, ஒரு பெண் குரல் மறுமுனையில் பேசியுள்ளது. அந்தப் பெண் தான் சுடுகாட்டிற்குள் இருப்பதாகவும், தனது வாகனம் பழுதாகிவிட்டதால் உள்ளே இருக்கும் மின் கம்பத்திற்கு அருகிலேயே உணவை கொண்டு வருமாறும் கூறியுள்ளார்.
இந்த திகிலூட்டும் வீடியோ இணையத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சுமார் 1 நிமிடம் 13 வினாடிகள் கொண்ட இந்த காட்சியில், அந்த டெலிவரி பாய் உயிருக்கு பயந்து ஆர்டரை ரத்து செய்வதாகக் கூறி அங்கிருந்து வெளியேறுகிறார். இது யாரோ ஒரு யூடியூபர் செய்த குறும்பாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கருதினாலும், அந்த டெலிவரி பாயின் முகத்தில் தெரிந்த பயம் உண்மையானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் உணவு வழங்க முனையும் இத்தகைய ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதோடு, நள்ளிரவில் அரங்கேறிய இந்த மர்மமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.