திமுகவின் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பேசுபொருள், மு.வீரபாண்டியன் நம்பிக்கை

சென்னை சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களான மா.சுப்பிரமணியன் மற்றும் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே பேசிய அவர், வரும் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களின் கிராமப்புறங்களில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் மூலம் மக்களின் மனநிலையைத் தெளிவாக உணர முடிவதாகக் குறிப்பிட்டார். தமிழக முதலமைச்சரின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை ஆகியவை சாமானிய மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதே இந்தக் கூட்டணிக்கு ஆதரவு பெருக முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சென்னை எப்போதும் திமுகவின் கோட்டையாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட வீரபாண்டியன், இங்கு சாதி, மத ரீதியான அரசியலுக்கோ அல்லது பிரிவினைவாதக் கருத்துக்களுக்கோ இடமில்லை என்றார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் இன்முகத்துடன் வரவேற்கும் பண்பு கொண்ட சென்னை மக்கள், பிளவுவாத அரசியலை முன்னெடுப்பவர்களைத் நிச்சயம் தோற்கடிப்பார்கள் என்றும், அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தோல்வி உறுதி என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறினார்.