தாஜ்மஹாலின் அழகை சீரழிக்கும் குப்பை மேடுகள்! யமுனையின் அவலத்தைப் பார்த்து வாந்தி எடுத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி

காதலின் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹாலை காண வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. லிசிப்ரியா என்ற அந்தப் பெண் சுற்றுலாப் பயணி, தாஜ்மஹாலின் பின்புறம் ஓடும் யமுனை நதி மற்றும் தசரா காட் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளைக் கண்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், நதிக்கரையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளைப் பார்த்து சகிக்க முடியாமல் அவர் வாந்தி எடுப்பதைக் காண முடிகிறது. தாஜ்மஹாலின் பிரம்மாண்டத்திற்கு அருகிலேயே நிலவும் இந்த அசுத்தம் குறித்து அவர் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் சுற்றுலா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக யமுனை நதியில் கலப்பதால், தாஜ்மஹாலின் பின் பகுதி கடும் மாசடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் பல வெளிநாட்டுப் பயணிகள் இது போன்ற புகார்களைத் தெரிவித்துள்ளனர். லிசிப்ரியாவின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தாஜ்மஹாலின் தூய்மை மற்றும் யமுனை நதியை மீட்டெடுப்பது குறித்த விவாதங்கள் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளன.