டைட்டானிக் பாணியில் டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் சிலையமைத்து மர்ம நபர்கள் நூதன கிண்டல்

வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய விசித்திர சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ‘சீக்ரெட் ஹேண்ட்ஷேக்’ என்ற மர்ம அமைப்பு, டைட்டானிக் திரைப்படத்தின் புகழ்பெற்ற காதல் காட்சியின் வடிவில் இந்தச் சிலையை உருவாக்கி அவர்களைக் கிண்டலடித்துள்ளனர். தங்கம் பூசப்பட்ட இந்தத் தற்காலிகச் சிலை, இருவருக்கும் இடையிலான பழைய நட்பையும் அவர்கள் மீதான சர்ச்சைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்தச் சிலையின் கீழ் உள்ள பதாகையில், டைட்டானிக் காதலர்களுடன் இவர்களை ஒப்பிட்டு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த 2025 ஆம் ஆண்டு இவர்களது நட்பைக் கிண்டலடித்து இதே போன்ற சிலையை அந்த அமைப்பு நிறுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விவாதங்கள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சிலை அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.