ஜெயலலிதாவிடம் பணம் கொள்ளையடித்த ஓபிஎஸ் குனிந்து கும்பிடு போட்டு ஏமாற்றுவதில் கில்லாடி என ஆர் பி உதயகுமார் சாடல்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஓ. பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் மறைந்த ஜெயலலிதாவிடம் குனிந்து கும்பிடு போட்டு ஏமாற்றியவர் என்றும், அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தற்போது எதிரி முகாமில் தஞ்சமடைந்துள்ளார் என்றும் சாடினார். அதிமுகவினரை விலைபேசி வாங்க ஓபிஎஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய உதயகுமார், அவரது துரோகத்தை காலம் மன்னிக்காது என மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.
முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓபிஎஸ் சரணடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய உதயகுமார், இது போன்ற துரோகங்களுக்கு காசிக்கு சென்றாலும் விமோசனம் கிடைக்காது என்றார். மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குத் தனது அறக்கட்டளை மூலம் கடன் உதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். இந்த காரசாரமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.