சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய் மற்றும் அமித் ஷாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று மதியம் டெல்லி செல்கிறார். ஏற்கனவே ஜனவரி மாதம் இருமுறை ஆஜரான நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ஆஜராக விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், நாளை அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்த பயணத்தின் போது விஜய்க்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே சந்திப்பு நிகழுமா என்ற அரசியல் விவாதம் மேலோங்கியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதனால் சிபிஐ விசாரணை ஒருபுறம் இருக்க, பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.