சவுதியில் ஏவுகணை தாக்குதல் எதிரொலி இந்தியர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், சவுதி அரேபியாவில் கடந்த மார்ச் 8 அன்று நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரு வங்கதேசத்தினர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இந்தியர் ஒருவர் பலியானதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது ஒரு இந்தியர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சவுதி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் காயமடைந்தவரை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை உறுதி செய்துள்ளனர்.
தற்போதைய பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் உள்ளூர் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களிலிருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் தற்போது தடையின்றி இயங்கி வருகின்றன. தாயகம் திரும்ப விரும்புவோர் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.