கூட்டணிக்கு வந்தால் வரட்டும், போனால் போகட்டும்! அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைவணங்காது’ என்ற திமுக பரப்புரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் உடனான கூட்டணி மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வர முடியுமா?”
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “திமுக என்பது சிறு துளியாக ஆரம்பித்து இன்று பேராற்றலாக வளர்ந்துள்ள ஒரு இயக்கம். 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. இன்று அவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? இதைக் கேட்டால் அவர்களுக்கு கோபம் வரும். தற்போது அவர்கள் நம்முடன் கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் தேவையில்லாத குழப்பங்களை விளைவிக்கிறார்கள்,” என்று விமர்சித்தார்.
ஸ்டாலினின் விளக்கம்: சதியா? முரண்பாடா?
சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் இருப்பதாக வெளியாகும் செய்திகளை மறுத்திருந்தார். “கூட்டணியில் பிளவு ஏற்படுத்தச் சிலர் சதி செய்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸும் உணர்ந்துள்ளது. எங்கள் கூட்டணி சுமுகமாகவே உள்ளது,” என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதிமுகவில் தொண்டர்களே இல்லை!
அதிமுக குறித்துப் பேசிய அமைச்சர், “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தோடு அந்த கட்சி முடிந்துவிட்டது. இன்று அதிமுகவில் இருப்பவர்கள் வெறும் நிர்வாகிகள் மட்டும்தான். அவர்கள் சீட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அமர்ந்திருக்கிறார்கள். களத்தில் தொண்டர்கள் யாரும் இல்லை. ராமநாதபுரம் பகுதியில் அதிமுக டெபாசிட் இழந்துவிட்டது. நான் இதுவரை 12 தேர்தல்களில் போட்டியிட்டு 8-ல் வெற்றி பெற்றுள்ளேன். 13-வது முறையும் போட்டியிட்டு வெல்வேன்,” என சவால் விடுத்தார்.
கூட்டணி குறித்து அதிரடி முடிவு
காங்கிரஸ் உடனான கூட்டணி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்த ராஜகண்ணப்பன்:
“முதல்வர் ஸ்டாலின் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும். எந்தவொரு கட்சியும் கூட்டணியை மட்டுமே நம்பி அரசியல் செய்ய முடியாது. நாம் திராவிட இயக்கத்தின் கொள்கை வழியில் வந்தவர்கள். யாருக்காகவும் நமது கொள்கையை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.”
அமைச்சரின் இந்த அதிரடியான பேச்சு, வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக – காங்கிரஸ் உறவில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.