காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன் இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ட்ரோன் இந்தியப் பகுதிக்குள் நுழைந்தது. காதி கர்மடா பகுதியில் சுமார் ஐந்து நிமிடங்கள் பறந்த அந்த ட்ரோன், வெடிபொருட்கள், தோட்டாக்கள் மற்றும் மருந்துகளை வீசிவிட்டுத் தப்பியோடியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன.
பனிக்காலத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்க பாகிஸ்தான் இந்த உத்தியைக் கையாள்வதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த அத்துமீறல் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க கிஷ்த்வார் மற்றும் அண்டை மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.