காதல் விவகாரத்தில் விபரீத முடிவு குணாவில் விஷம் குடித்து காதலர்கள் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள ரஷீத் காலனியில் காதல் விவகாரம் காரணமாக இளம் பெண் மற்றும் அவரது காதலர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான கணேஷ் ரஜக் என்பவரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமி தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலியின் மரணத்தை அறிந்த கணேஷ் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி வீட்டிற்கு கணேஷ் விஷம் கொண்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், திருமண பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கணேஷின் குடும்பத்தினர் தங்களுக்கு இந்த காதல் விவகாரம் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர். கேன்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விஷம் எங்கிருந்து கிடைத்தது மற்றும் தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.