எய்ம்ஸ் மருத்துவரின் அசாத்திய சாதனை 20 கிலோ கட்டியை அகற்றி புற்றுநோய் நோயாளிக்கு மறுவாழ்வு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகுர்தீபி ராய், நான்காம் நிலை குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மறுவாழ்வு அளித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த 42 வயதான முன்முன் ஓஜா என்பவரது வயிற்றில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள ராட்சத கட்டியை அவர் வெற்றிகரமாக அகற்றியுள்ளார். பல்வேறு மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், இந்த சவாலான அறுவை சிகிச்சையை டாக்டர் ராய் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளார்.
இரண்டு கட்டங்களாக சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில், மற்ற உறுப்புகளைப் பாதிக்காமல் அந்த ராட்சத கட்டி அகற்றப்பட்டது. தற்போது முழுமையாக குணமடைந்த நோயாளி வீடு திரும்பியுள்ளார். நான்காம் நிலையில் புற்றுநோய் இருந்தாலும் முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. துரித உணவுகளைத் தவிர்த்து, உடல் நலனில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கவனித்தால் புற்றுநோயை வெல்லலாம் என்று டாக்டர் ராய் அறிவுறுத்தியுள்ளார்.