உயிருடன் இருக்கும் நோயாளிக்கு பிரேத பரிசோதனை செய்ய முயற்சி கான்பூர் மருத்துவமனையின் அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில், உயிருடன் இருந்த நோயாளி ஒருவரை இறந்ததாக அறிவித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார்டில் இருந்த வினோத் என்ற நோயாளிக்கு பதிலாக, பக்கத்து படுக்கையில் உயிரிழந்த முதியவரின் கோப்பில் ஜூனியர் மருத்துவர் தவறுதலாக கையெழுத்திட்டதே இந்த குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. மாலை நேரத்தில் போலீசார் உடலை எடுக்க வந்தபோது, வினோத் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கடுமையான அலட்சியத்திற்காக ஒரு ஜூனியர் மருத்துவர் மற்றும் செவிலியர் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் சஞ்சய் காலா இது குறித்து விசாரணை நடத்த மூவர் குழுவை அமைத்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது ஆவணங்கள் சரி செய்யப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உயிருடன் மீண்ட வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.