ஈரான் அமெரிக்கா இடையிலான போரை தடுத்த பாகிஸ்தான் இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த போர் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ளது. ஈரானின் நாகரிகத்தையே அழித்துவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் மேற்கொண்ட தீவிர ராஜதந்திர முயற்சிகளால் தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஷேபாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை ஏற்று, அடுத்த இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் செய்யப்படுவதாக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஈரான் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு, பொருளாதார தடைகளை நீக்குதல், யுரேனியம் செறிவூட்டல் அனுமதி மற்றும் ஹெஸ்பொல்லா மீதான நடவடிக்கைகளை நிறுத்துதல் போன்ற நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. இதனை ஈரான் தனது வெற்றியாக கருதுகையில், உலக அமைதிக்கான முக்கிய நகர்வாக அமெரிக்கா பார்க்கிறது.
இப்போர்நிறுத்தத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதல் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக ஓமன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் சுமுகமான உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான் தற்போது வெற்றிகரமான தூதுவராகச் செயல்பட்டுள்ளது. இந்த உடனடி போர்நிறுத்த முடிவை பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வரவேற்றுள்ளதுடன், இது லெபனான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என உறுதிப்படுத்தியுள்ளார்.