இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு மத்தியில் அரிசி இறக்குமதி செய்ய வங்கதேசம் முடிவு

வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டாலும் அந்நாட்டு இடைக்கால அரசு தனது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் இந்தியாவையே நாடியுள்ளது. சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாட்டை நீக்கவும் இந்தியாவிலிருந்து 50,000 டன் புழுங்கல் அரிசியை இறக்குமதி செய்ய யூனுஸ் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய நிறுவனமான பகடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் சுமார் 220 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கொள்முதல் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளை அணுகியும் பலன் கிடைக்காத நிலையில் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அரிசி இறக்குமதிக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்தியாவுடனான வர்த்தகம் எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது. இது உள்நாட்டு சந்தையில் நிலவும் விலையேற்றத்தை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.