அதிமுக எம்பி தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவன ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி கெடு

திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராமத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளை கட்டடங்களை கட்டியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்பி தம்பிதுரையின் குடும்பத்தினர் நிர்வகிக்கும் இந்த அறக்கட்டளை, கடந்த 2001 முதல் பொது நிலங்களை ஆக்கிரமித்து விடுதிகள் மற்றும் சாலைகளை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்த நீதிமன்றம், நிலத்தை மீண்டும் அளவிட உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையேற்றுக்கொண்ட நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களை இன்னும் 12 வாரங்களுக்குள் முழுமையாக மீட்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.