வயிற்றுக்குள் அரை மீட்டர் நீள பேண்டேஜை வைத்து தைத்த மருத்துவர்கள் ஒன்றரை ஆண்டு நரக வேதனையில் பெண்

செய்தி பிரிவு : கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் அரை மீட்டர் நீளமுள்ள பேண்டேஜ் துணியை மருத்துவர்கள் கவனக்குறைவாக விட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார். பல மருத்துவமனைகளுக்குச் சென்றும் கண்டறிய முடியாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மற்றொரு அறுவை சிகிச்சையின் போது துணி எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர்கள் அஞ்சனா அகர்வால், மனிஷ் கோயல் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உட்பட ஆறு பேர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த மருத்துவக் குறைபாட்டினால் அவர் மீண்டும் தாயாகும் வாய்ப்பை இழந்துள்ளதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டல் விடுப்பதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.