மோடியை சிக்க வைத்த அமெரிக்கா! மிகக் குறைந்த வரி விதிப்பில் நிலக்கரி முதல் உணவுப் பொருட்கள் வரை இறக்குமதி?

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை இந்தியா ரகசியமாக வைத்திருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் அதனைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகை வெளியிட்ட விரிவான பட்டியல் மோடி அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், பருப்பு போன்ற விவசாயப் பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றிற்கு இந்தியா மிகக் குறைந்த அளவிலேயே வரி விதிக்க வேண்டும் அல்லது முற்றிலும் வரியை நீக்க வேண்டும் (Zero Tax). மேலும், டிஜிட்டல் சேவை வரியையும் (Digital Service Tax) இந்தியா முழுமையாக ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பொருட்களை இந்தியா கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
அரசியல் நெருக்கடி:
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தகவல் எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய ஆயுதமாகக் கிடைத்துள்ளது. “இந்தியாவின் விவசாய மற்றும் வணிக நலன்களை அமெரிக்காவிடம் மோடி அரசு அடகு வைத்துவிட்டது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிந்து கால்நடைத் தீவனத்தைக் கூட அங்கிருந்து இறக்குமதி செய்ய மோடி அரசு சம்மதித்துள்ளது. இந்தியாவில் கால்நடைகளுக்குத் தீவனப் பற்றாக்குறை இல்லாதபோது ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு:
“இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகை கொண்ட சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிபர் ட்ரம்ப் திறந்துவிட்டுள்ளார். இது ஒரு பொற்காலம்,” என்று வெள்ளை மாளிகை உற்சாகமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் வணிக நலன்களுக்கு என்ன பயன் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட அமெரிக்க அறிக்கையில் இடம் பெறவில்லை.
தற்போது இந்த விவகாரம் இந்திய அரசியலில் “நரேந்திர சரண்டர்” என்ற முழக்கத்துடன் அனலைக் கிளப்பியுள்ளது.