பப்ஜி மோகத்தால் மூளை ரத்தப்போக்கு: 22 வயது இளைஞன் பரிதாப உயிரிழப்பு!

ஆன்லைன் விளையாட்டுகளின் மீதான அதீத மோகம் ஒரு உயிரைப் பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் மீரட்டில் நடந்துள்ளது. மீரட்டின் கைர்நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான முகமது கைஃப், ‘பப்ஜி’ (PUBG) விளையாடிக்கொண்டிருந்த போதே மூளை ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சம்பவம் நடந்தது என்ன?
ரியல் எஸ்டேட் தொழிலதிபரான தனது தந்தையின் அலுவலகத்தில் அமர்ந்து கைஃப் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நாற்காலியில் இருந்து மயங்கி விழுந்த அவரை, உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ரத்த அழுத்தம் (Blood Pressure) 300-க்கும் மேல் அதிகரித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ரத்த அழுத்தம் மிக வேகமாக உயர்ந்ததால் அவருக்கு மூளையில் உள் ரத்தப்போக்கு (Brain Hemorrhage) ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மருத்துவர்கள் கூறும் காரணம்:
இந்த அகால மரணம் குறித்து மருத்துவர்கள் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்:
- அட்ரினலின் அதிகரிப்பு: இதுபோன்ற விறுவிறுப்பான ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும்போது உடலில் அட்ரினலின் ஹார்மோன் சுரப்பு அதீதமாக இருக்கும். இது ரத்த அழுத்தத்தை திடீரென உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
- மன அழுத்தம்: விளையாட்டின் வெற்றி-தோல்விகளால் ஏற்படும் கடும் மன அழுத்தம் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் பாதிக்கிறது.
- ஹெட்ஃபோன் பயன்பாடு: ‘நாய்ஸ் கேன்சலிங்’ ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது வெளிப்புறத் தொடர்பைத் துண்டித்து, மூளையை விளையாட்டிற்குள் முழுமையாக ஆழ்த்துகிறது, இது ஆபத்தை அதிகரிக்கிறது.
தொடரும் கேமிங் போதை:
கைஃப் நீண்ட நேரமாக மொபைல் கேம்கள் விளையாடுவதையும், இரவு முழுவதும் விழித்திருந்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். போதிய தூக்கமின்மை மற்றும் மொபைல் போதை ஆகியவை இளைஞர்களிடையே ‘சடன் கேமர் டெத்’ (Sudden Gamer Death) எனும் அபாயத்தை அதிகரிப்பதாக நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.