மாந்திரீகக் கூடத்தில் மரணம்? டெல்லி கார் மர்மத்தில் திடுக்கிடும் தகவல்கள்

டெல்லி பீராகர்ஹி மேம்பாலத்தில் காருக்குள் மூன்று பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் தற்போது ‘மாந்திரீக’ பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீஸ் விசாரணையில், உயிரிழந்த ரந்தீர், நரேஷ் மற்றும் லட்சுமி ஆகிய மூவரும் இறப்பதற்குச் சற்று முன்பு ஒரு மாந்திரீகரைச் சந்தித்தது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து மது பாட்டில்கள் மற்றும் வாந்தி எடுத்த தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த மாந்திரீகர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை. சொத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ரந்தீர் மற்றும் நரேஷ் எதற்காக மாந்திரீகரைச் சந்திக்கச் சென்றனர் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.