புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெரும் சிக்கல் இன்று முதல் ஆன்லைன் டெலிவரி சேவைகள் முடக்கம்

புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் ஸ்விக்கி, ஜொமாட்டோ மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நள்ளிரவு உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்யத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் டெலிவரி சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த ஊதியம் மற்றும் வேலை பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறுவனங்கள் ஏற்க மறுப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஆர்டர்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என்பதால் மக்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.