பீட்சா பர்கர் மற்றும் குளிர்பானங்களின் விலையை உயர்த்த சுகாதார அமைச்சகம் அதிரடி திட்டம்

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினையை கட்டுப்படுத்த சிப்ஸ், பீட்சா, பர்கர் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அதிக வரி விதிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. நாட்டில் சுமார் 24 சதவீத பெண்களும் 23 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய உணவுகளின் விலையை உயர்த்துவதன் மூலம் அவற்றின் பயன்பாட்டை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது நீரிழிவு மற்றும் இதய நோய்களைத் தவிர்க்க உதவும் என கருதப்படுகிறது.
வரி விதிப்பு மட்டுமின்றி, இத்தகைய உணவுகளின் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிப்பதை தவிர்க்கவும், கவர்ச்சிகரமான சலுகைகளை கட்டுப்படுத்தவும் அமைச்சகம் விரும்புகிறது. 2009 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்த உணவுகளின் விற்பனை 40 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இத்தகைய உணவுகள் மீதான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.