ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெண் கழிப்பறை தட்டுப்பாட்டால் பிரதமர் தகாய்ச்சி உட்பட பெண் எம்.பி.க்கள் அவதி

ஜப்பானின் 90 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றக் கட்டிடத்தில் பெண் உறுப்பினர்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முதல் பெண் பிரதமர் சனே தகாய்ச்சி இந்த விவகாரத்தில் பெண் எம்.பி.க்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். தற்போதுள்ள 73 பெண் எம்.பி.க்களுக்கு வெறும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே முக்கிய அவைக்கு அருகில் உள்ளதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத 1936-ம் ஆண்டில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அப்போது பெண் ஊழியர்களுக்கான வசதிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. 2024 தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பற்றாக்குறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்.பி.க்கள் மட்டுமல்லாது அங்கு பணிபுரியும் பெண் செய்தியாளர்களும் இந்த அடிப்படை வசதியின்றி தவிப்பதாக எம்.பி. யாசுகோ கோமியாமா தெரிவித்துள்ளார்.