ஜப்பானை முந்தியது இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து சாதனை

இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டுமே தற்போது இந்தியாவிற்கு முன்னிலையில் உள்ளன. இதே வேகத்தில் வளர்ச்சி தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் 7.3 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு 2027 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது. சர்வதேச முதலீட்டு நிறுவனங்களின் அறிக்கைகள், இந்தியா இந்த இலக்கை நிர்ணயித்த காலத்திற்குள்ளேயே எட்டிவிடும் என்று கணித்துள்ளன. ஜப்பானைத் தாண்டி இந்தியா அடைந்துள்ள இந்த முன்னேற்றம், உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியையும் முந்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.