குளிர்காலத்தில் அதிகரிக்கும் பக்கவாதம் அபாயம்! ‘FAST’ மூலம் அறிகுறிகளை அறியுங்கள்

குளிர்காலத்தில் மூளை பக்கவாதம் (Brain Stroke) ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெப்பநிலை குறையும்போது, உடலின் இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த அழுத்தம் வேகமாக உயர்கிறது. மேலும், இரத்தத்தின் அடர்த்தி சற்று அதிகரிப்பதால், இரத்தம் உறைவதற்கான வாய்ப்பும் கூடுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இஸ்கிமிக் மற்றும் ரத்தக்கசிவு (Hemorrhagic) பக்கவாதத்திற்கான முக்கிய காரணிகளாகும்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை விரைவாகக் கண்டறிய உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘FAST’ முறையைப் பின்பற்றுவது அவசியம். முகத்தின் ஒரு பக்கம் தொய்வடைதல் (Face Drooping), கைகளில் பலவீனம் (Arm Weakness) மற்றும் பேச்சுக் குழறுதல் (Speech Difficulty) போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது (Time to Call) மிக முக்கியம். குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க, தினசரி இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உடலை கதகதப்பாக வைத்திருப்பதும், ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதும் அவசியம்.