குறைவான நகைகளால் ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டாரை சிறைபிடித்தார்

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் நகைகள் குறைவாக இருந்த காரணத்தால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய விசித்திர சம்பவம் நடந்துள்ளது. மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்த நகைகள் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் கோபமடைந்த மணப்பெண், திருமணச் சடங்குகளின் போது மேடையை விட்டு வெளியேறினார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மணப்பெண் வீட்டார் மணமகன் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களை பல மணி நேரம் சிறைபிடித்து வைத்தனர்.
இதையடுத்து கிராம பஞ்சாயத்து முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருமண ஏற்பாடுகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகையை ஈடுசெய்ய மாப்பிள்ளை வீட்டார் சம்மதித்ததையடுத்து, மணமகன் மற்றும் உறவினர்கள் விடுவிக்கப்பட்டனர். இறுதியில் திருமணம் நின்று போனதால், மணமகன் தனது உறவினர்களுடன் வெறும் கையுடன் ஊர் திரும்ப நேரிட்டது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் சமரசம் செய்து கொண்டதால் காவல்துறை தரப்பில் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.