இனி உஷார் மக்களே விதிகளை மீறினால் 12 புள்ளிகளில் உங்கள் ஓட்டுநர் உரிமம் தானாகவே ரத்து செய்யப்படும்

இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு ‘பெனால்டி பாயிண்ட்ஸ்’ எனும் புதிய தண்டனைப் புள்ளி முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி அதிவேகம், ஹெல்மெட் அணியாமை மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற ஒவ்வொரு விதிமீறலுக்கும் ஓட்டுநர் உரிமத்தில் புள்ளிகள் சேர்க்கப்படும். தற்போது 100 மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த புதிய விதியின்படி இரண்டு ஆண்டுகளில் ஒரு ஓட்டுநர் 12 புள்ளிகளைப் பெற்றால், அவரது உரிமம் ஒரு ஆண்டிற்கு ரத்து செய்யப்படும். இரண்டாவது முறையாக 12 புள்ளிகள் சேர்ந்தால் ஐந்து ஆண்டுகள் வரை உரிமம் நீக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நேரடியாக 12 புள்ளிகள் விதிக்கப்பட்டு உரிமம் பறிமுதல் செய்யப்படும். சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொறுப்பான ஓட்டுநர்களை உருவாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.