பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் 5 வேட்பாளர்கள் மனுதாக்கல் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ பெயரான ‘சி.ஜோசப் விஜய்’ என்ற பெயரில் அவர் மனுதாக்கல் செய்துள்ள சூழலில், அதே தொகுதியில் அவரைப் போன்றே பெயர்களைக் கொண்ட மேலும் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேட்புமனுத் தாக்கலில் ஜி.விஜய், கே.விஜய் என இரண்டு விஜய்களும், எம்.ஜோசப் மற்றும் எஸ்.ஜோசப் என இரண்டு ஜோசப்களும் சுயேச்சையாக போட்டியிட மனு அளித்துள்ளனர். ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் தவெக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது திட்டமிட்ட அரசியல் தந்திரமாக இருக்கலாம் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.
பெரிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போட்டியிடும் போது, அவர்களின் வெற்றியைப் பாதிக்கும் வகையில் அதே பெயருடைய நபர்களை எதிர்த்தரப்பினர் சுயேச்சையாக களமிறக்குவது வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பெரம்பூர் தொகுதியில் தற்போது அரங்கேறியுள்ள இந்த ‘பெயர் அரசியல்’ அஸ்திரத்தை முறியடித்து, விஜய் தனது வெற்றியைப் பதிவு செய்வாரா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.