கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை

இந்தியாவின் கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகக் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். பாகிஸ்தான் இத்தகைய ஆவேசமான மற்றும் தூண்டிவிடும் வகையிலான பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சந்தித்த பிரிவினையை அந்நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தனது பேச்சில், இந்தியா ஏதேனும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாகிஸ்தான் தனது தாக்குதலை கொல்கத்தா வரை கொண்டு செல்லும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மீண்டும் வங்காளத்தின் மீது தனது பார்வையை செலுத்த முயன்றால், இந்த முறை அந்த நாடு எத்தனை துண்டுகளாக சிதறும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய குவாஜா ஆசிப், இந்தியா ஒரு ‘False Flag’ நடவடிக்கையை திட்டமிடுவதாக எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு முன்னதாக ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், எல்லையில் ஏதேனும் அத்துமீறல்கள் நடந்தால் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிலடி கொடுக்கும் என்று ராஜ்நாத் சிங் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.