பிஎஃப் சந்தாதாரர்கள் கவனத்திற்கு இனி பென்ஷன் பணத்தை எடுக்க 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

இபிஎஃப்ஓ அமைப்பின் புதிய விதிமுறைகளின்படி, ஊழியர்கள் வேலையை விட்டு நின்றாலோ அல்லது வேறு வேலைக்கு மாறினாலோ தங்களின் பென்ஷன் நிதிப் பணத்தை உடனடியாக எடுக்க முடியாது. குறைந்தது மூன்று ஆண்டுகள் காத்திருந்த பிறகே குறிப்பிட்ட விதிகளின் கீழ் பணத்தைப் பெற விண்ணப்பிக்க முடியும். ஊழியர்கள் வேலை மாறும் சமயங்களில் பென்ஷன் பணத்தை எடுத்துவிடுவதால், அவர்களின் எதிர்கால ஓய்வூதியப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களின் பென்ஷன் நிதியை முன்கூட்டியே எடுப்பதால், ஓய்வு காலத்திற்குப் பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் வருவாய் குறைகிறது. இந்த நிலையை மாற்றவும், ஊழியர்களிடையே நீண்டகால சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இபிஎஃப்ஓ இந்த தடையைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் ஊழியர்களின் ஓய்வூதிய நிதி பாதுகாக்கப்படுவதோடு, முதிர்வு காலத்தில் அவர்களுக்கு உறுதியான நிதி உதவி கிடைப்பது உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.